Showing posts with label People. Show all posts
Showing posts with label People. Show all posts

Sunday, 22 January 2012

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!-By மாணவன்


ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.



அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர். அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.
                                                     

அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு  ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல... வரலாற்று உண்மை!.

'ஜூலியஸ் சீசர்' என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், 'Gaul' பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை "De Bello Gallico" என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் "I came, I saw, I Conquered" என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர். 


பல பிரதேசங்களை கைப்பற்றிய வீரமும், தன்னிடம் வீழ்ந்தவர்களை கெளரவமாக நடத்திய விவேகமும், முறையற்ற ஆணைகளுக்கு அடிபணியாத தைரியமும், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும், இவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையாக விளங்கிய கட்டொழுங்கும்தான் சீசருக்கு "ரோம சாம்ராஜ்யம்" எனும் வானத்தை வசப்படுத்தின. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு கைகொடுத்த அதே பண்புகள் இப்போது நமக்கும் கைகொடுக்கும், விடாமுயற்சியோடு போராடினால் நாம் விரும்பும் வானத்தை நமக்கும் வசப்படுத்தும்.



Wednesday, 11 January 2012

தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! By மாணவன்


தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! (பிறந்த நாள் வாழ்த்து சமர்ப்பனம் FEBRUARY 11)

வணக்கம் நண்பர்களே, இன்று அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஆம் தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ட்சிக்காகவும் கண்டுபிடிப்புக்காகவும் அர்ப்பனித்து சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் தந்தை என வரலாறு போற்றும் அறிவியல் உலகின் ஈடு இனையற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பதிவு ஒரு சமர்ப்பனம்.


Genius is
1% Inspiration and
 99% perspiration
அதாவது மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை என்ற புகழ்பெற்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் வேறு யாருமல்ல அந்த பொன்மொழியை கூறியவரும் வாழ்ந்துகாட்டியவருமான ஈடு இனையற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்.


ஓர் ஏழை அமெரிக்க குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ந்தேதி பிறந்தார் எடிசன். பள்ளியில் அவர் மந்தமாக இருந்த்தால் படிப்பி ஏறவில்லை ஆனால் இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ட்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. 
ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.


ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் செய்த்தித்தாள் விற்கும் வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை வைத்து தானே செய்தித்தாள்களை தயாரிக்கத் தொடங்கினார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.
ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூட்த்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.


அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.


அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.


உதாரணத்திற்கு இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.


1876 ல் அவர் மெட்னோ பார்க்கில் புகழ்பெற்ற தனது ஆராய்ட்சிகூடத்தை அமைத்தார். அந்த ஆராய்ட்சிகூடத்தில்தான் உலகம் போற்றும் பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸாண்டர் கிரகம்பெல் உருவாக்கிய தொலைபேசியை காவர் டிரான்ஸ்மிட்டர் என்ற பாகத்தை கண்டுபிடித்தன் மூலம் எடிசன்தான் செம்மைப் படுத்தினார். அதன்பிறகு ஃபோனோகிராப் என்ற குரல் பதிவு கருவியை கண்டுபிடித்து அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தினார் எடிசன்.
எடிசனின் கண்டுபிடிப்பிகளிலேயே ஃபோனோகிராப்தான் ஆக பிரசித்திப்பெற்றதாக கருதப்படுகிறது. ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.   


ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.
அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.


அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.
நமக்கு மின்ஒளி கிடைத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள். அதன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், சினிமா கேமராவின் முன்னோடியான கெனோட்டோகிராப், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ந்தேதி 86 ஆவது வயதில் அவரது உயிர் பிரிந்தது, அதுவரை ஆராய்ட்ச்சியும் கண்டுபிடிப்புமே அவரது உயிர் மூச்சாக இருந்தன.


தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? 1300 சரித்திரத்தில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்டகூட நெருங்க முடியாத எண்ணிக்கை அது. அதனால்தான் அவரை கண்டுபிடிப்புகளின் தந்தை என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.


எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒரு முறை கூறினார் இவ்வாறு:


வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்   


அந்த உயரிய நல்ல நோக்கத்தின் அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அந்த மின் விசையை அழுத்தும்போது உங்களை சுற்றியுள்ள இருளை போக்குவதும் ஒளியை தருவதும் அன்று எடிசன் சிந்திய வியர்வைதான்.
எடிசன் செய்து காட்டியதுபோல 1 விழுக்காடு ஊக்கத்தை முதலீடு செய்து 99 விழுக்காடு வியர்வையை சிந்த நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.


(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

"பயிற்சியும் முயற்சியும் இருந்தால் 
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே"

என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

 

அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் By சித்திரவீதிக்காரன்


அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்



எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம்தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.   
- கமல்ஹாசன்
நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் பல மனிதர்களில் சிலரை பார்த்தவுடனே எந்த காரணமும் இல்லாமலே நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அப்படித்தான், கமல்ஹாசன் அவர்களைப் பார்த்த முதல் நாளே மிகவும் பிடித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே கமல்ஹாசன் மீதான அன்பு நடிகர், ரசிகர் என்பதையும் தாண்டிப் புனிதமானது. அபூர்வசகோதரர்களில்சர்க்கஸ் கலைஞனாக வரும் ‘அப்பு’ கமலை இளம்வயதில் மிகவும் பிடித்தது. ஒலியும் ஒளியும் போடும்போதெல்லாம் அடுத்த பாட்டு கமல் பாட்டாக இருக்க வேண்டுமென்று வேண்டுவேன். எங்கப்பா, சித்தப்பா மற்றும் சகோதரர்கள் எனப்பலரும் எங்கள் வீட்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் கமல்ஹாசனும் ஒருவர்.
கமல்ஹாசனும் சித்திரவீதிக்காரர்தான். அவருக்குச் சித்திரங்களின் மீது விருப்பம் அதிகம் என்பதை அவரது படங்களிலேயே நாம் காணலாம்.அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் ஓவியராகவே வருவார். அந்தப்படத்தில் மதன் வரும் காட்சியில் மறைந்த ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நடிப்பதாக இருந்ததாம். ராஜபார்வையில்அந்திமழை பொழிகிறது பாடலில் மாதவி மரத்துக்கருகில் நிற்கும் கமல்ஹாசனை வரைந்து கொண்டிருப்பார். அப்படியே ஓவியத்திலிருந்து கமல்ஹாசன் நடந்து வருவார். அதேபோல,அபூர்வசகோதரர்களில் அண்ணாத்தே ஆடுறார் பாட்டு தொடக்கத்தின்போது ஜனகராஜின் கையிலுள்ள கமல்ஹாசன் ஓவியத்திலிருந்து உருவமாக மாறிவருவார். வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு ஓவியர் வருவார். அவர் அப்படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரம். காக்கிச்சட்டை படத்தில் கதாநாயகி அம்பிகா ஓவியராக வருவார். அந்தப்படத்தில் கமல்ஹாசனை மிக அருமையாக பல விதங்களில் வரைந்திருப்பார். விருமாண்டி படத்தில் ஒரு ஓவியர் வருவார். படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் சித்திரமாக வரைந்துகொண்டேயிருப்பார். கமல் கிணற்றில் அபிராமியுடன் இருக்கும் காதல்காட்சி முதல் நீதிமன்றத்தில் அடிக்க ஓடிவரும் காட்சி வரை நிறையக்காட்சிகளை வரைந்து பதிவு செய்து கொண்டேயிருப்பார். ஆளவந்தான் படத்தில் நந்தகுமார் கதாபாத்திரம் ஓரிரு இடங்களில் கார்ட்டூனாக காட்டியிருப்பார்கள். அதற்காக நிறைய ஓவியங்களை வரைந்திருப்பார்கள். உன்னைப்போல் ஒருவனில் கமல்ஹாசன் சாயல்களை சொல்ல ஒருவர் கணினியில் வரைந்து கொடுப்பார். அதே போலஇந்தியனிலும் கிழவர் கமல்ஹாசனைப் படமாக வரைந்து மிகப்பெரிய பதாகையாக வைத்திருப்பார்கள். பஞ்சதந்திரத்தில் ஒரு நீர்வண்ண ஓவியப் புத்தகம் ஒன்றிலிருந்து கதை பின்னோக்கிப் போகும். சிம்ரன் குழந்தைக்கு கமலின் முந்தைய வாழ்க்கையைப் படத்தைக் காண்பித்துக் கதை சொல்லிக்கொண்டே உணவு கொடுத்துக்கொண்டிருப்பார். மன்மதன் அம்பு படத்தில்நீலவானம் பாடலில் கமலும் அவரது காதலியும் சுவற்றில் ஓவியம் வரைவது போன்ற காட்சி வரும். அதுவும் அப்பாடல் பின்னோக்கி செல்லும் பாடல் என்பதால் மிகவும் வித்தியாசமாக எடுத்திருப்பார்கள். ஹேராமில் கூட ஆதிமூலத்தின் ஓவியங்களைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். இப்படித் தன் படங்களில் ஓவியங்களை, ஓவியர்களை கமல்ஹாசன் அதிகம் காட்டியிருப்பார்.
கமல்ஹாசனை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்று விரும்பினேன். என் விருப்பத்தை எப்பொழுதும் மதுரை நிறைவேற்றிவிடும். நான்மாடக்கூடலிலேயே கமல்ஹாசன் தனது சண்டியர்படத்துவக்கவிழாவைத் துவங்கினார். சண்டியர்படத்துவக்கவிழாவிற்கு மறுநாள் எனக்கு இயற்பியல் முழுஆண்டுத்தேர்வு. ஆனாலும், கமல்ஹாசனைப் பார்த்துவிட்டு, தேர்வன்று அதிகாலை அழகரையும் பூப்பல்லக்கில் பார்த்துவிட்டுப்போய்த் தேர்வெழுதித் தேறினேன். இரண்டு அழகர்களைக் காணும் வாய்ப்பைத் தந்த அந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவை மறக்க முடியாது.  அதற்குப் பிறகு நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு இராஜாமுத்தையா மன்றத்தருகில் சிலை திறந்த அன்றும் கமல்ஹாசனை மற்றொருமுறை காணும் வாய்ப்பை மதுரை மீண்டும் பெற்றுத் தந்தது. கமல்ஹாசனும் நம்ம தென்பாண்டிநாட்டான்தானே.
‘தமிழ்வையை’யின் கரையிலுள்ள இராமநாதபுரத்தில் பிறந்த காரணத்தால் கமல்ஹாசனுக்கு தமிழ் மீது பற்று சற்று அதிகம். நடிகராயிருந்த போதும் மய்யம் எனும் இலக்கியப்பத்திரிக்கை நடத்தும் அளவு தமிழ் மீது ஆர்வம் இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பும் நடிகர் கமல்ஹாசன்தான். ஒரு நேர்காணலில் தொ.பரமசிவன் அய்யாவை சந்தித்ததை மிகவும் முக்கியமாக குறிப்பிடுகிறார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா கமல்ஹாசனுடைய நண்பர். மேலும், சுந்தர ராமசாமியையும் ஒருமுறை நேரில்போய் சந்தித்திருக்கிறார். ஜெயகாந்தன், தொ.பரமசிவன், கவிஞர் புவியரசு, ஞானசம்பந்தன், மனுஷ்யபுத்திரன், ஞானக்கூத்தன், ரா.கி.ரங்கராஜன், பாலகுமாரன், நீலபத்மநாபன், பிரளயன், மதன் எனப் பலருடனும் நட்புடன் இருக்கிறார். கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு கமல்ஹாசன் தன் நற்பணிமன்றத்தின் மூலமாக விழா எடுத்தார். அன்று கமல்ஹாசன் ஜெயமோகனின் கொற்றவையை பலமுறை வாசித்ததாக கூறினார். அதைப் படித்ததும் வியப்படைந்தேன். கமல்ஹாசனின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது தொ.பரமசிவன் அய்யா கமல்ஹாசன் குறித்து பேசிய பொழுது
கமல் சிறந்த வாசகர். மருதநாயகம் படத்திற்காக சில புத்தகங்களை வாசிக்கச்சொல்லி நான் அவரிடம் படிக்க பரிந்துரைத்த போது அதையெல்லாம் தான் வாசித்துவிட்டதாகக் கூறி மற்ற மொழிகளிலும் வந்த சில புத்தகங்களை எல்லாம் வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஆய்வு மாணவன் போன்ற அவரது உழைப்பைக் கண்டு வியந்தேன். மேலும், கமல்ஹாசன் கோணங்கி வரை வாசிக்கிறார். இப்ப உள்ள பல வாத்தியார்களுக்கு கோணங்கி யாருன்னே தெரியாது. அதனால் கமல் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்யாதது ஒருவகையில் நல்லதுதான். அப்படியில்லையென்றால் இந்த அளவு வாசிப்பு அவருக்கு கிட்டியிருக்காது
என்றார். கமல்ஹாசனின் இலக்கிய ஆர்வத்திற்குச் சான்றாக தொ.பரமசிவன் அய்யா சொன்ன இந்தஒரு விசயம் போதும். கமல்ஹாசன் நடித்த அவள் அப்படித்தான் பட வசனகர்த்தாக்களில்வண்ணநிலவனும் ஒருவர்.
கமல் ஒருமுறை விகடனில் தன் வீடு குறித்துப் பேசும் பொழுது அவரது நூலகம் குறித்துச் சொன்னது:
என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைப் படிக்கிறது, எழுதறது எல்லாமே இங்கேதான்! ஷேக்ஸ்பியர், கம்பன், சித்தர்கள், காளிதாசர், பாரதி, ஜெயகாந்தன், லா.ச.ரா, மில்டன், கீட்ஸ், தேவதச்சன், வண்ணதாசன், தொ.பரமசிவம் எல்லோரும் இந்த ரூம்லதான் இருக்காங்க.
கமல்ஹாசனது திரைக்கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான நாவல்கள் எனலாம். உதாரணமாக,மகாநதி, அன்பேசிவம், தசாவதாரம்.
 விஜய் தொலைக்காட்சி மதுரை திருமலைநாயக்கர் மகாலில் கமலும் தமிழும் என்ற நிகழ்ச்சி நடத்தியபோது தமிழின் இலக்கிய ஆளுமைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு எடுத்த முக்கியமானதொரு விழா எனலாம். அன்று எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பிரளயன், ஞானசம்பந்தன், சிவசங்கரி, ஷாஜி, இரா.முருகன், கபிலன், சண்முகராஜா, இயக்குனர்கள் சசிக்குமார், சேரன், சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒரு சிறந்த கலைஞன் மற்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கலைஞானி கமல்ஹாசனும் அப்படித்தான் மற்ற கலைகளின் மீது விருப்பம் கொண்டவர். வீதிநாடகம் குறித்த கமல்ஹாசனின் விருப்பத்தினால்தான் அன்பே சிவம் படத்தில் வரும் நாட்டுக்கொருசேதி சொல்லஎன்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை வீதிநாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரளயன் அவர்களைக் கொண்டு எடுத்திருப்பார். அந்த படத்தில் பிரளயனும் ஒரு காட்சியில் வருவார். பிரளயனின் வீதிநாடகங்களை இரண்டுமுறை மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது பெரும்பாக்கியம் என நினைக்கிறேன். தசாவதாரத்தில் தோற்பாவைக்கூத்து,அன்பேசிவத்தில் வீதிநாடகம், விருமாண்டியில் தேவராட்டம் (அதைச் சரியாக கம்பளநாயக்கர் வீட்டுவிழாக்களில் நடைபெறும் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்), அபூர்வசகோதரர்களில் புலியாட்டம், தேவர்மகனில் தப்பாட்டம், சிலம்பாட்டம், சலங்கைஒலியில் பரதக்கலைஞனாக,அபூர்வராகங்களில் மிருதங்கக்கலைஞனாக என தன் படங்களில் மற்ற கலைகளையும் காட்டியிருக்கிறார். புலியாட்டம் என்று ஒரு புத்தகம் வாசித்த போது அதில் அந்நூலாசிரியர் திரைப்படத்தில் புலியாட்டத்தை சிறப்பாக காட்டியது அபூர்வசகோதரர்களில்தான் என்கிறார்.
கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் ஓரிரு காட்சிகளில் கமல் வரும் படங்கள்கூட எனக்குப் பிடிக்கும். உதாரணத்திற்குதில்லுமுல்லு, மகளிர் மட்டும், நளதமயந்தி. மறக்க முடியாத படங்கள் என்றால் தனிப்பதிவே எழுத வேண்டிவரும். அபூர்வசகோதரர்கள், உன்னால்முடியும் தம்பி, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, உயர்ந்த உள்ளம், சத்யா, குணா, தெனாலி, அன்பேசிவம், விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களில் சில காட்சிகளில் ஒன்றிப்போய் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன். அதுவும் வேலை கிடைக்காத நாளில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் பார்த்துக்கொண்டிருந்த போது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வி.கே.ராமசாமி இறந்த பிறகு ஒரு கடையில் கணக்குபிள்ளை இறந்துட்டாருன்னு சொல்லும் காட்சி, பழம் விற்கும் பாட்டி இரண்டு ரூபாய்க்கு மூணுபழம் எனும்போது கமல் மூணுரூபாய்க்கு இரண்டுபழம் கேட்கும் காட்சியில் அந்தப்பாட்டியின் உயர்ந்த உள்ளம், கழிவுகளை அள்ளுவதற்காகத்தான் குடித்ததாய் அம்பிகாவிடம் புலம்பும் காட்சி எல்லாம் பார்த்து அழுதபோது சுற்றி இருந்தவர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனாலும், அதுபோல என்னை நெகிழ வைத்த காட்சிகள் கமல்ஹாசன் படங்களில் அதிகம். ரேடியோ மிர்ச்சியில் கமல்ஹாசன் பேசுவதை அடிக்கடி போடுவார்கள். அதில் வலி குறித்து பேசும் போது ‘வலிதான் உயிர் வாழ்வதற்கான அத்தாட்சி. NO PAIN NO GAIN’ என்று கூறிவிட்டு ‘வலியுடன் கமல்ஹாசன்’ என்பார். அதை கேட்டதும் எனக்கு மனசு ரொம்ப வலிக்கும்.
அன்பே சிவம்’ படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு குடையை வைத்து சண்டையிடும் காட்சி கமல்ஹாசனின் படங்களில் எனக்கு பிடித்த சண்டைக்காட்சி. அந்தப்படத்தில் இறுதியில் வரும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவைதான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.
கமல்ஹாசன் படங்களில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அதிலும் கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடிய சில பாடல்களை மற்றவர்கள் பாடினால் அந்தளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். உதாரணமாக ‘நினைவோ ஒரு பறவை, விக்ரம், கடவுள்பாதி மிருகம்பாதி, ஆழ்வார்பேட்டை ஆளுடா, சுந்தரிநீயும் சுந்தரன்ஞானும், கண்மணி அன்போடு, தென்பாண்டி சீமையிலே, ராஜா கையவச்சா, உன்னவிட,  தகுடுதத்தம், முத்தே முத்தம்மா’. அதே போல பாடல்களிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். வசனம் பாடலினூடாக வருவது, வட்டார வழக்கில் பேசுவது எல்லாம் கமல்ஹாசனின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மகாநதியில் வரும்‘தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது’ என்னும் பாடலுக்கு முன் பாரதியின் ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை கமல்ஹாசன் வாசிப்பார். அதைத்தான் எனது அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன். மேலும், அந்தப்பாடலின் இறுதியில் வரும் வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை.
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி!
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வியென்பதை ஏற்பதில்லையடி!
கமல்ஹாசனின் துள்ளலான பாடல்களை உற்சாகமான வேளைகளில் பாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டும் போது பாடிக்கொண்டே ஓட்டுவது மகிழ்வான விசயம். ‘மாருகோ மாருகோ, பூப்போட்டதாவணி, அண்ணாத்தே ஆடுறார், ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வானிலே தேனிலா, பேரைச்சொல்லவா’ போன்ற பாட்டுகளை கேட்டாலோ அல்லது பாடினாலோ தானாகவே தோள்கள் அசைய, மெல்லிய ஆட்டம் உடலில் பரவத்தொடங்கும். அவரைப் போல நடனமாட வேண்டும் என்பது எனது இளமைக்கால விருப்பங்களுள் ஒன்று. அப்பொழுதெல்லாம் தனியாக கண்ணாடிமுன் அல்லது விளக்கொளியில் என் நிழலைப் பார்த்து ஆடிக்கொண்டிருப்பேன். கமல்ஹாசன் படங்களில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் தனித்துவமானவை. கதாநாயகர்களில் கமலும், ரஜினியும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மைக்கேல் மதனகாமராசன், தெனாலி, அவ்வைசண்முகி, பஞ்சதந்திரம், பம்மல். K. சம்பந்தம், வசூல்ராஜா எல்லாம் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும். கமல்ஹாசன் – கிரேஸிமோகன்  கூட்டணி என்றால் எல்லாத்தொகுதிகளிலும் மகிழ்ச்சிதான்.
முன்பு தூர்தர்ஷனில் அலைவரிசை பிரச்சனை ஏற்படும் பொழுது குறுக்கும் மறுக்குமாக கட்டங்கள் தெரிய ‘கொய்ங்ங்’ என்று தடங்கல் ஒலி கேட்கும். சண்டியர் படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஏற்பட்ட தடங்கலை, படத்தின் பெயர் மாற்றியதால் பேர் போடும் போது அது போல கட்டங்களில் பெயர்கள் மட்டும் சாதாரணமாக வர பின்னால் இளையராஜாவின் இசையில் பிளிறல் போன்ற ஒலி பின்னனியில் ஒலித்துக்கொண்டிருக்கும். தனது கருத்தை நுட்பமாக பதிவு செய்திருப்பார்.
‘நடிகர்களுள் ஒரு நாயகன்’ என்று எழுத்தாளர் வாஸந்தி சொன்னது கமல்ஹாசனின் மனிதநேய குணத்திற்கு மிகவும் பொருந்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் நடிகர்களில் முதன் முதலில் கண்தானம், இரத்ததானம் என்பதையும் கடந்து உடல்தானம் செய்து அதன் மீதான கவனத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாபர் மசூதி இடித்த பொழுது அதைக்கண்டித்து திரைப்படத்துறையிலிருந்து எதிரொலித்த முதல்குரல் கமல்ஹாசனுடையது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சனை வந்தபோது தொழிலாளர் பக்கம் நின்றவர் கமல்ஹாசன். ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றியவர்.
கமல்ஹாசனைக் குறித்த செய்திகள், கமல்ஹாசனின் நேர்காணல்கள், கமல்ஹாசன் நிழற்படங்கள் என எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். கமல்ஹாசனைக் குறித்து வந்த புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கி விடுவேன். கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற விசயம் என்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் குறித்து எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் போட்டாலும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பும் சகோதரர்கள், என்னைப் பார்க்கும் போது கமல் குறித்து பேசும் நண்பர்கள், விருமாண்டி வந்த சமயம் முழுபக்க ஃப்ளோஅப் வந்ததை பார்த்ததும் எனக்கு எடுத்து வர நினைத்த ஆசிரியர் என கமல்ஹாசன் மீதான எனது அன்பை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பதிவில் உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னுடைய வாசிப்பு மேம்பட கமல்ஹாசனும் ஒரு காரணம். அவருடைய நல்லசிவம் (அன்பேசிவம்), வின்சென்ட் பூவராகன் (தசாவதாரம்), உதயமூர்த்தி (உன்னால் முடியும் தம்பி) போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் வாழ்வில் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ நடிகர் என்பதோடு இல்லாமல் என்னுடைய அபூர்வ சகோதரராகவே நினைக்கிறேன். பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானையும், கடலும் மட்டுமல்ல கமலும்தான். அவரை குறித்து நினைத்தாலே இனிக்கும், பார்த்தால் பசி தீரும். உயர்ந்த உள்ளம், வெற்றிவிழா நாயகன், அன்பால் ஆளவந்த அபூர்வசகோதரர், எனக்குள்ஒருவன் மருதநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்து இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கிறார்.
கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி. அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் சித்திரவீதிக்காரன்
.