அபூர்வ சகோதரர் கமல்ஹாசன்
எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம்தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.- கமல்ஹாசன்
கமல் சிறந்த வாசகர். மருதநாயகம் படத்திற்காக சில புத்தகங்களை வாசிக்கச்சொல்லி நான் அவரிடம் படிக்க பரிந்துரைத்த போது அதையெல்லாம் தான் வாசித்துவிட்டதாகக் கூறி மற்ற மொழிகளிலும் வந்த சில புத்தகங்களை எல்லாம் வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த ஆய்வு மாணவன் போன்ற அவரது உழைப்பைக் கண்டு வியந்தேன். மேலும், கமல்ஹாசன் கோணங்கி வரை வாசிக்கிறார். இப்ப உள்ள பல வாத்தியார்களுக்கு கோணங்கி யாருன்னே தெரியாது. அதனால் கமல் பள்ளிப்படிப்பைப் பூர்த்தி செய்யாதது ஒருவகையில் நல்லதுதான். அப்படியில்லையென்றால் இந்த அளவு வாசிப்பு அவருக்கு கிட்டியிருக்காது
என்றார். கமல்ஹாசனின் இலக்கிய ஆர்வத்திற்குச் சான்றாக தொ.பரமசிவன் அய்யா சொன்ன இந்தஒரு விசயம் போதும். கமல்ஹாசன் நடித்த அவள் அப்படித்தான் பட வசனகர்த்தாக்களில்வண்ணநிலவனும் ஒருவர்.
கமல் ஒருமுறை விகடனில் தன் வீடு குறித்துப் பேசும் பொழுது அவரது நூலகம் குறித்துச் சொன்னது:
என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைப் படிக்கிறது, எழுதறது எல்லாமே இங்கேதான்! ஷேக்ஸ்பியர், கம்பன், சித்தர்கள், காளிதாசர், பாரதி, ஜெயகாந்தன், லா.ச.ரா, மில்டன், கீட்ஸ், தேவதச்சன், வண்ணதாசன், தொ.பரமசிவம் எல்லோரும் இந்த ரூம்லதான் இருக்காங்க.
கமல்ஹாசனது திரைக்கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான நாவல்கள் எனலாம். உதாரணமாக,மகாநதி, அன்பேசிவம், தசாவதாரம்.
விஜய் தொலைக்காட்சி மதுரை திருமலைநாயக்கர் மகாலில் கமலும் தமிழும் என்ற நிகழ்ச்சி நடத்தியபோது தமிழின் இலக்கிய ஆளுமைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி கமல்ஹாசனுக்கு எடுத்த முக்கியமானதொரு விழா எனலாம். அன்று எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பிரளயன், ஞானசம்பந்தன், சிவசங்கரி, ஷாஜி, இரா.முருகன், கபிலன், சண்முகராஜா, இயக்குனர்கள் சசிக்குமார், சேரன், சசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒரு சிறந்த கலைஞன் மற்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கலைஞானி கமல்ஹாசனும் அப்படித்தான் மற்ற கலைகளின் மீது விருப்பம் கொண்டவர். வீதிநாடகம் குறித்த கமல்ஹாசனின் விருப்பத்தினால்தான் அன்பே சிவம் படத்தில் வரும் நாட்டுக்கொருசேதி சொல்லஎன்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை வீதிநாடகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரளயன் அவர்களைக் கொண்டு எடுத்திருப்பார். அந்த படத்தில் பிரளயனும் ஒரு காட்சியில் வருவார். பிரளயனின் வீதிநாடகங்களை இரண்டுமுறை மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது பெரும்பாக்கியம் என நினைக்கிறேன். தசாவதாரத்தில் தோற்பாவைக்கூத்து,அன்பேசிவத்தில் வீதிநாடகம், விருமாண்டியில் தேவராட்டம் (அதைச் சரியாக கம்பளநாயக்கர் வீட்டுவிழாக்களில் நடைபெறும் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்), அபூர்வசகோதரர்களில் புலியாட்டம், தேவர்மகனில் தப்பாட்டம், சிலம்பாட்டம், சலங்கைஒலியில் பரதக்கலைஞனாக,அபூர்வராகங்களில் மிருதங்கக்கலைஞனாக என தன் படங்களில் மற்ற கலைகளையும் காட்டியிருக்கிறார். புலியாட்டம் என்று ஒரு புத்தகம் வாசித்த போது அதில் அந்நூலாசிரியர் திரைப்படத்தில் புலியாட்டத்தை சிறப்பாக காட்டியது அபூர்வசகோதரர்களில்தான் என்கிறார்.
‘அன்பே சிவம்’ படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு குடையை வைத்து சண்டையிடும் காட்சி கமல்ஹாசனின் படங்களில் எனக்கு பிடித்த சண்டைக்காட்சி. அந்தப்படத்தில் இறுதியில் வரும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது.
பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஓர் பறவைதான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகர்யமாக கருதும் பறவை. இனி என் பயணங்களில் நான் தங்கப்போகும் கிளைகளில் என் அருமைத்தம்பியின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.
கமல்ஹாசன் படங்களில் வரும் பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அதிலும் கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாடிய சில பாடல்களை மற்றவர்கள் பாடினால் அந்தளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். உதாரணமாக ‘நினைவோ ஒரு பறவை, விக்ரம், கடவுள்பாதி மிருகம்பாதி, ஆழ்வார்பேட்டை ஆளுடா, சுந்தரிநீயும் சுந்தரன்ஞானும், கண்மணி அன்போடு, தென்பாண்டி சீமையிலே, ராஜா கையவச்சா, உன்னவிட, தகுடுதத்தம், முத்தே முத்தம்மா’. அதே போல பாடல்களிலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். வசனம் பாடலினூடாக வருவது, வட்டார வழக்கில் பேசுவது எல்லாம் கமல்ஹாசனின் தனிச்சிறப்புகளில் ஒன்று. மகாநதியில் வரும்‘தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாளாது’ என்னும் பாடலுக்கு முன் பாரதியின் ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ கவிதையை கமல்ஹாசன் வாசிப்பார். அதைத்தான் எனது அலைபேசியின் அழைப்பு ஒலியாக வைத்துள்ளேன். மேலும், அந்தப்பாடலின் இறுதியில் வரும் வரிகள் என்னை அதிகம் கவர்ந்தவை.
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி!எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வியென்பதை ஏற்பதில்லையடி!
கமல்ஹாசனின் துள்ளலான பாடல்களை உற்சாகமான வேளைகளில் பாடுவது மற்றும் சைக்கிள் ஓட்டும் போது பாடிக்கொண்டே ஓட்டுவது மகிழ்வான விசயம். ‘மாருகோ மாருகோ, பூப்போட்டதாவணி, அண்ணாத்தே ஆடுறார், ஏஞ்சோடி மஞ்சக்குருவி, வானிலே தேனிலா, பேரைச்சொல்லவா’ போன்ற பாட்டுகளை கேட்டாலோ அல்லது பாடினாலோ தானாகவே தோள்கள் அசைய, மெல்லிய ஆட்டம் உடலில் பரவத்தொடங்கும். அவரைப் போல நடனமாட வேண்டும் என்பது எனது இளமைக்கால விருப்பங்களுள் ஒன்று. அப்பொழுதெல்லாம் தனியாக கண்ணாடிமுன் அல்லது விளக்கொளியில் என் நிழலைப் பார்த்து ஆடிக்கொண்டிருப்பேன். கமல்ஹாசன் படங்களில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் தனித்துவமானவை. கதாநாயகர்களில் கமலும், ரஜினியும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மைக்கேல் மதனகாமராசன், தெனாலி, அவ்வைசண்முகி, பஞ்சதந்திரம், பம்மல். K. சம்பந்தம், வசூல்ராஜா எல்லாம் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும். கமல்ஹாசன் – கிரேஸிமோகன் கூட்டணி என்றால் எல்லாத்தொகுதிகளிலும் மகிழ்ச்சிதான்.
முன்பு தூர்தர்ஷனில் அலைவரிசை பிரச்சனை ஏற்படும் பொழுது குறுக்கும் மறுக்குமாக கட்டங்கள் தெரிய ‘கொய்ங்ங்’ என்று தடங்கல் ஒலி கேட்கும். சண்டியர் படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஏற்பட்ட தடங்கலை, படத்தின் பெயர் மாற்றியதால் பேர் போடும் போது அது போல கட்டங்களில் பெயர்கள் மட்டும் சாதாரணமாக வர பின்னால் இளையராஜாவின் இசையில் பிளிறல் போன்ற ஒலி பின்னனியில் ஒலித்துக்கொண்டிருக்கும். தனது கருத்தை நுட்பமாக பதிவு செய்திருப்பார்.
‘நடிகர்களுள் ஒரு நாயகன்’ என்று எழுத்தாளர் வாஸந்தி சொன்னது கமல்ஹாசனின் மனிதநேய குணத்திற்கு மிகவும் பொருந்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் நடிகர்களில் முதன் முதலில் கண்தானம், இரத்ததானம் என்பதையும் கடந்து உடல்தானம் செய்து அதன் மீதான கவனத்தைக் கொண்டு வந்தவர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாபர் மசூதி இடித்த பொழுது அதைக்கண்டித்து திரைப்படத்துறையிலிருந்து எதிரொலித்த முதல்குரல் கமல்ஹாசனுடையது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சனை வந்தபோது தொழிலாளர் பக்கம் நின்றவர் கமல்ஹாசன். ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றியவர்.
கமல்ஹாசனைக் குறித்த செய்திகள், கமல்ஹாசனின் நேர்காணல்கள், கமல்ஹாசன் நிழற்படங்கள் என எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். கமல்ஹாசனைக் குறித்து வந்த புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கி விடுவேன். கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற விசயம் என்னுடன் பழகும் அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் குறித்து எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் போட்டாலும் மறக்காமல் குறுஞ்செய்தி அனுப்பும் சகோதரர்கள், என்னைப் பார்க்கும் போது கமல் குறித்து பேசும் நண்பர்கள், விருமாண்டி வந்த சமயம் முழுபக்க ஃப்ளோஅப் வந்ததை பார்த்ததும் எனக்கு எடுத்து வர நினைத்த ஆசிரியர் என கமல்ஹாசன் மீதான எனது அன்பை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி. இப்பதிவில் உள்ள படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றிகள் பல.
என்னுடைய வாசிப்பு மேம்பட கமல்ஹாசனும் ஒரு காரணம். அவருடைய நல்லசிவம் (அன்பேசிவம்), வின்சென்ட் பூவராகன் (தசாவதாரம்), உதயமூர்த்தி (உன்னால் முடியும் தம்பி) போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் வாழ்வில் முன்மாதிரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். கமல்ஹாசன் என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ நடிகர் என்பதோடு இல்லாமல் என்னுடைய அபூர்வ சகோதரராகவே நினைக்கிறேன். பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானையும், கடலும் மட்டுமல்ல கமலும்தான். அவரை குறித்து நினைத்தாலே இனிக்கும், பார்த்தால் பசி தீரும். உயர்ந்த உள்ளம், வெற்றிவிழா நாயகன், அன்பால் ஆளவந்த அபூர்வசகோதரர், எனக்குள்ஒருவன் மருதநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் எடுத்து இப்பொழுது விஸ்வரூபம் எடுக்கிறார்.
கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் ஏழாம் தேதி. அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரன் சித்திரவீதிக்காரன்
.
.
Thanks to:http://maduraivaasagan.wordpress.com
No comments:
Post a Comment