Wednesday, 7 March 2012

நிறுவனங்கள் மற்றும் வரலாறுகள்


Computer and Info Technology -களில் பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வருவது பற்றி நாமெல்லோரும் அறிவோம். அப்படி பல ஸ்தாபனங்கள் செயலாற்றி வந்தாலும்,  விரல் விட்டு எண்ணக்கூடிய  சில ஸ்தாபனங்களின் பெயர்களை, எப்பொழுதும், நாம் நினைவில் வைத்து இருப்பதோடு, அந்த பெயர்களையும் சதா  சொல்லியப்படி இருப்பதை எவராலும் மறுக்கவியலாது. 

அந்த பெயர்களை, இந்த ஸ்தாபனங்கள், எப்படி பெற்றெடுத்தன? அவற்றின் வரலாறு என்ன? என்று, எப்போதேனும்,  யோசித்து இருக்கிறோமா? சரி! சில நிமிடங்களை இப்போதாவது செலவு செய்து எப்படி பெற்றென என்றுதான் பார்ப்போமே!! 

1.  Adobe.com:  ஒரு நதியின் பெயரே Adobe என்பதாகும். இந்நிறுவனத்தை 1982 December -ரில் தொடங்கிய, இருவரில் (John Warnock and Charles Geschke) ஒருவரான John Warnock அமெரிக்காவின் California மாகாணத்தில் உள்ள  Los Altos என்ற பகுதியில் வசிக்கிறார். இவருடைய வீட்டிற்குப் பின்புறம் தான் இந்த Adobe Creek என்னும் நதி ஓடிக்கொண்டு இருக்கிறது.
 
 










இந்நிறுவன logo -வை வடிவமைத்தவர்,  John Warnock  -ன் மனைவி  Marva Warnock (a graphic designer) ஆவார். இந்நிறுவனத்தின் President andChief Operating Officer ஆக Shantanu Narayen  என்னும் Hyderabad (India) நகரை சேர்ந்தவர், 2005 January -இல் இருந்து பணிபுரிந்து வருகிறார். மேலும், major development operation -களுக்காக உலகின் பல பகுதிகளில் இந்நிறுவனம் தனது அலுவலக கிளைகளை (Branch Offices) திறந்திருந்தாலும், இந்தியாவில்  Noida, மற்றும் Bengaluru  -வில் இதற்கான கிளைகள்  இருக்கின்றன.

2. Apple.com:   1970 -களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல்  Slogan -  "Byte into an Apple"  என்பதுதான். இதன் பிறகு 1997 -2002 கால கட்டங்களில் வியாபார நோக்கில் இதன் slogan  "Think Different" என்று மாற்றி அமைக்கப் பட்டாலும், இதன் குறிப்பிட்ட சில கருவிகளுக்கு "iThink" -என்பதிலிருந்து  ..... 'iMac', 'iPhone', 'iPod' போன்ற வித்தியாசமான பெயர்களையும் உபயோகித்து வருகிறது.
 
Apple Company Headquarters
 






இந்நிறுவனத்தை ஸ்தாபித்தவர்களில் முதன்மையாளராக கருதப்படும் Steven Paul Jobs, சுருக்கமாக Steve Jobs ஆரம்பகாலங்களில், ஆப்பிள் பண்ணையில் வேலை செய்து வந்திருக்கிறார். ஆரம்பிக்க போகும், தனது, புதிய Computer நிறுவனத்துக்கு பெயர் ஒன்றை அவருடைய  நண்பர்கள் பரிசீலித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, ஒருவேளை அவர்களால் பரிசீலிக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் கம்பெனிக்கு Apple Computers என்றே  பெயர் வைத்து விடப்போவதாக  வேடிக்கையாகவும் சொல்லி உள்ளார். நண்பர்களாலும்  எந்தவொரு நல்ல பெயரையும் கொடுக்க முடியாத நிலையில் இந்நிறுவனத்துக்கு Apple Computers என்பதே இறுதி பெயராகி, சரித்திரத்திலும் நிலை பெற்றுவிட்டது.

Steve Jobs -இன் பெற்றோர்கள் Joanne Carole Schieble மற்றும்  Abdul Fattah Jandali ஆவார்கள். இவரது தந்தை சிரியா (Syria) நாட்டில் பிறந்த  ஒரு முஸ்லிம்.  இவரது  தாயும், தந்தையும்  university மாணவர்களாக இருந்தபோதே காதலில் வயப்பட்டதினால், திருமண பந்தம் இல்லாமலேயே,  Steve Jobs பிறந்திருக்கிறார்.  Paul Reinhold Jobs  and Clara Jobs என்கிற தம்பதியர் இவரை, குழந்தை பருவத்திலேயே, தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள். இத்தம்பதியர் தாம், தனது பெற்றோர்கள் என்று Steve Jobs  பெருமையுடன் கூறியும் உள்ளார்.

2003 -இல், Steve Jobs,  pancreatic cancer  -ரினால் பாதிக்கப்பட்டார். 2009 -இல்  liver transplant செய்தும் பலனில்லாமல்,  5 October 2011 -அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 56.

    
3. Google.com: மிகப்பெரிய Search Engine -ஐ தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிறுவனத்தை Stanford University  -யில் Ph.D  செய்துவந்த  Larry Pageand Sergey Brin   என்ற இரு  மாணவர்கள்  நிறுவிய போது, இதில்  தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 இல் தொடங்கி, அதன்பின் 100 பூஜ்யங்கள்  கொண்ட எண்களாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு,  (அதாவது A "GOOGOL" is the large number 10100, that is, the digit 1 followed by 100 zeros) "Googol" என்றே   முதலில் உருவாக்கம் செய்தார்கள். எழுதும்போது ஏற்பட்ட சிறு தவறால் (misspelling) Google என்று மாறிப்போனது! 
  
Google Headquarter










மேலும்,  "google"  என்ற இச்சொல்லானது காலப்போக்கில் Merriam Webster Collegiate DictionaryOxford English Dictionary  போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆங்கில அகராதிகளில் ("to use the Google search engine to obtain information on the Internet" -என்கிற அளவுக்கு) இடம் பெற்றதோடு,  Global Language Monitor  என்னும் அமைப்பும் மற்றும்  BBC    -யும் சேர்ந்து,  2009 -இன் பிற்பகுதியில் (முறையே   "Google" No. 7 on its Top Words of the Decade list & Google in their Portrait of the Decade (Words) series என்று) புகழாரமும் சூட்டின.

ஆக, Miss Spelling -உடன் தொடங்கப்பட்ட  "Google"  நிறுவனம், இன்று, மனித இனத்தின் சிந்தனைப்போக்கையே மாற்றி விட்டதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.


 4. hotmail.comஇணைய(த்தொடர்பின்) அடிப்படையில்தான் இயங்க வேண்டும் என்னும் நோக்கத்தில்  உருவாக்கம்  செய்யப்பட்ட  இந்த Hotmail சேவையே இணைய அடிப்படையில் இயங்கும் முதல் சேவையாக கருதப்படுகிறது.


Sabeer Bhatia (earned a master's degree in electrical engineering from Stanford University)   and Jack Smith  என்கிற இரு பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த சேவை 1996, July 4 -லிருந்து   Microsoft  நிறுவனத்தின்  Windows Live -மூலம்  செயற்பட்டு வருகிறது. 

Internet  இணைப்பை  தருகின்ற - Internet Service Provider (ISP) -களின் உதவி இன்றி, தனது சொந்தமான (hotmail) Server -ரிலிருந்து  அனுப்பப்படுகின்ற  e mail,  Web Server -ஐ அடைந்தபின், மீண்டும் அந்த mail -ஐ  எப்படி பெறுவது  என்று பலமுறை சிந்தித்து,  இந்த hotmail -ஐ, வடிவமைத்து இருக்கிறார் Sabeer Bhatia. இவர்  இந்தியாவின்,  Chandigarh  நகரில் பிறந்து, Bangalore -ல் வளர்ந்து ஆளானவர்.

இந்நிறுவனத்துக்காக பல பெயர்களை இந்த Sabeer Bhatia உண்டாக்கிப் பார்த்திருக்கிறார்; எந்தப்  பெயராக இருந்தாலும், அது mail என்றே முடிய வேண்டும் என தீர்மானமாக இருந்திருக்கிறார். காரணம், Web Page -களில் உபயோகிக்கக்கூடிய Programming மொழியை (machine language), பொதுவாக HTML (அதாவது, Hyper Text Markup Language)  என்று  சொல்கிறோம். ஆக, HOTMAIL என்பதில் HTML இருப்பதால் இதுவே சரியானத்தேர்வு  என முடிவு செய்து hotmail என்று  பெயர் வைத்திருக்கிறார். (The name "Hotmail" was chosen out of many possibilities ending in "-mail" as it included the letters HTML - the markup language used to create web pages).
தொடங்கியகாலங்களில் இது HoTMaiL என - HTML தனித்து தெரிவது  போன்று - பெரிய எழுத்துகளிலும், மற்றவை  சிறிய எழுத்துகளிலுமாக அமைக்கப்பட்டு   பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்போது எழுதும் வழக்கமான  முறையில் மாற்றப்பட்டது.


 5. Intel.com:  Gordon E. Moore  (a chemist, physicist) and Robert Noyce (a physicist) ஆகிய  இருவரால், 1968 -இல், இந்நிறுவனம் தொடங்கப் பட்டது.
Intel Headquarters








தங்களின், இந்த புதிய நிறுவனத்துக்கு  "Moore Noyce" என்று பெயரிடவே முதலில் முடிவு செய்தனர்.  ஆனால், இந்தப்பெயர்  "more noise" என்கிற அர்த்தத்தில் பார்க்கப்பட்டால் - அதிலும், ஒரு  electronics  நிறுவனத்துக்கு இம்மாதிரியான பெயர் சரியாக வராதே! என்றெல்லாம் யோசித்து, கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு NM Electronics என்னும் பெயரை வைத்திருந்தார்கள்.

பிறகு, Integrated Electronics -அல்லது, சுருக்கமாக "Intel" என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்று பார்க்கும்போது, Intel என்னும் இந்தப் பெயர் Intelco என்ற hotel chain (or group of hotels) மூலம் ஏற்கெனவே பதிவு (trademarked) செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

பிறகென்ன! Intelco -விடம் பேரமும், விலையும் பேசி பெயருக்கான உரிமை (rights for the name) வாங்கப்பட்டது. ஆக, இப்படி பேரம் பேசி வாங்கப்பட்ட அந்த Intel -என்னும் பெயரே,  உலகில்  புகழ் பெற்ற ஒரு பெயராக திகழ்கிறது.


6. microsoft.com:   Bill Gates  and  Paul Allen  என்ற பால்ய வயது சிநேகிதர்களினால் 1975, April 4 -லில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இதற்கான அடித்தளம் போடப்பட்டது என்னவோ, Popular Electronics என்ற பத்திரிகையின் 1975, January மாத இதழில் வெளிவந்த புகழ் பெற்ற ஒரு கட்டுரையினால் தான் என்றால் எவருமே நம்பத்தான் மாட்டார்கள்! ஆம், அதுதான் உண்மையும் கூட!

MITS (Micro Instrumentation andTelemetry Systems) என்ற சிறு நிறுவனத்தின் Altair 8800 என்னும் microcomputer பற்றிய கட்டுரை தான் அது. அந்த கட்டுரையை  Paul Allen   கொண்டுவந்து  Bill Gates  இடம் கொடுத்து 'நாமும்  MITS -உடன் இணைந்து, அவர்களுக்கு தேவைப்படும் BASIC programming language  -ஐ செய்து கொடுக்கலாமே' என்று சொல்லி, இருவரும் சேர்ந்து அதை செய்து கொடுக்க, இதன் அடிப்படையில் Paul Allen  சிந்தனையில் உருவாக்கம் ஆனது தான்  Micro-Soft  நிறுவனம்.

இடையே இருந்த சிறு இடைக்கோட்டை Bill Gates, 1979 -இன் பிற்பகுதியில், நீக்கிவிட்டு  Microsoft என்று ஒரே பெயராக்கினார்.    இப்போது, இந்த பெயரே உலக மக்களின் வாழ்க்கையை  புரட்டிப்போட்ட நிறுவன பெயராகவும்  அமைந்து விட்டது.

7. yahoo.com:  Stanford University-இல் Electrical Engineeringபடித்துவந்த Jerry Yang and David Filo  என்கிற மாணவர்களால், 1994 January -இல்,  "David and Jerry's Guide to the World Wide Web" என்கின்ற பெயரில்தான் இந்நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால்,  1994 April மாதத்தில் "Yahoo!" என பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. 

காரணம், "yahoo" என்ற இந்த பெயர், அக்காலகட்ட கல்லூரி மாணவர்களிடையே, சிலாகித்து பேசும் அளவுக்கு மிக பிரபல்யமாக இருந்ததோடு, David Filo -வின் (கல்லூரி) girlfriend ஒருத்தியும், வேடிக்கையாக David Filo -வை, இப்பெயராலேயே அடிக்கடி, கூப்பிட்டு (கிண்டலடித்து) வந்ததும் கூட பெயர் மாற்றத்திற்கான காரணங்களாக இருந்தாலும், "yahoo" என்பது, Jonathan Swift என்பவரின் Gulliver's Travelsஎன்ற கதையில் வரும்  ஒரு அமானுஷ்ய பாத்திரத்தின் (legendary being)  பெயராகவும் இருந்தது. Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்ற சொல், "Yet Another Hierarchical Officious Oracle" என்னும் சொற்றொடரில் இருந்து,acronym முறையில் (அதாவது, acronym is widely used to describe any abbreviation formed from initial letters, such as NATO,  FBIHTML etc.,) எடுத்தாளப்பட்டதும் கூட!

மேலும், Gulliver's Travels கதைப்படி, "yahoo" என்றப்பெயருக்கு - மிகவும்  முரட்டுத்தனமும், நாகரிகம் அற்ற, பண்பாடு ("rude, unsophisticated, uncouth") என்னவென்றே அறியாத இளைஞனை குறிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டும்  இருந்தது. நாங்களும் அப்படியான இளைஞர்கள்தான் என்று Jerry -யும் Filo -வும், தங்களுக்கு  தாங்களே, வேடிக்கையாக, குறிப்பிட்டுக் கொண்டதால் Yahoo! என்ற பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்து சூட்டிக்கொண்டனர்.



Sunday, 22 January 2012

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!-By மாணவன்


ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.



அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர். அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.
                                                     

அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு  ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல... வரலாற்று உண்மை!.

'ஜூலியஸ் சீசர்' என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், 'Gaul' பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை "De Bello Gallico" என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் "I came, I saw, I Conquered" என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர். 


பல பிரதேசங்களை கைப்பற்றிய வீரமும், தன்னிடம் வீழ்ந்தவர்களை கெளரவமாக நடத்திய விவேகமும், முறையற்ற ஆணைகளுக்கு அடிபணியாத தைரியமும், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும், இவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையாக விளங்கிய கட்டொழுங்கும்தான் சீசருக்கு "ரோம சாம்ராஜ்யம்" எனும் வானத்தை வசப்படுத்தின. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு கைகொடுத்த அதே பண்புகள் இப்போது நமக்கும் கைகொடுக்கும், விடாமுயற்சியோடு போராடினால் நாம் விரும்பும் வானத்தை நமக்கும் வசப்படுத்தும்.



Friday, 20 January 2012

A NICE POEM FROM என் உயிர்த்தோழா!


கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…

-முத்தாஸ் கண்ணன்

நன்றி; Rammalar’s Weblog


உயிர் உடைத்த புகைப்படம்... (உங்கள் மனமும் வலிக்கக் கூடும் ..) BY கவிப்ரியன்





கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரைநாடு,நகரம்,கிராமம்,காடுமலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றிபருகநீரின்றி பசி,தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூடஇயலாத நிலையில்எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல்பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கானவாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர்கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை?இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


 ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்;கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்றுகொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am  Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும்இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும்அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்

நன்றி; இராமன் பாண்டியன் & சம் இதழ்


Wednesday, 11 January 2012

தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! By மாணவன்


தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்! (பிறந்த நாள் வாழ்த்து சமர்ப்பனம் FEBRUARY 11)

வணக்கம் நண்பர்களே, இன்று அறிவியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஆம் தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ட்சிக்காகவும் கண்டுபிடிப்புக்காகவும் அர்ப்பனித்து சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் தந்தை என வரலாறு போற்றும் அறிவியல் உலகின் ஈடு இனையற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பதிவு ஒரு சமர்ப்பனம்.


Genius is
1% Inspiration and
 99% perspiration
அதாவது மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை என்ற புகழ்பெற்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் வேறு யாருமல்ல அந்த பொன்மொழியை கூறியவரும் வாழ்ந்துகாட்டியவருமான ஈடு இனையற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்.


ஓர் ஏழை அமெரிக்க குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ந்தேதி பிறந்தார் எடிசன். பள்ளியில் அவர் மந்தமாக இருந்த்தால் படிப்பி ஏறவில்லை ஆனால் இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ட்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது. 
ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.


ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் செய்த்தித்தாள் விற்கும் வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை வைத்து தானே செய்தித்தாள்களை தயாரிக்கத் தொடங்கினார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.
ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூட்த்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.


அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.


அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.


உதாரணத்திற்கு இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.


1876 ல் அவர் மெட்னோ பார்க்கில் புகழ்பெற்ற தனது ஆராய்ட்சிகூடத்தை அமைத்தார். அந்த ஆராய்ட்சிகூடத்தில்தான் உலகம் போற்றும் பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸாண்டர் கிரகம்பெல் உருவாக்கிய தொலைபேசியை காவர் டிரான்ஸ்மிட்டர் என்ற பாகத்தை கண்டுபிடித்தன் மூலம் எடிசன்தான் செம்மைப் படுத்தினார். அதன்பிறகு ஃபோனோகிராப் என்ற குரல் பதிவு கருவியை கண்டுபிடித்து அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தினார் எடிசன்.
எடிசனின் கண்டுபிடிப்பிகளிலேயே ஃபோனோகிராப்தான் ஆக பிரசித்திப்பெற்றதாக கருதப்படுகிறது. ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.   


ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.
அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.


அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.
நமக்கு மின்ஒளி கிடைத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள். அதன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், சினிமா கேமராவின் முன்னோடியான கெனோட்டோகிராப், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ந்தேதி 86 ஆவது வயதில் அவரது உயிர் பிரிந்தது, அதுவரை ஆராய்ட்ச்சியும் கண்டுபிடிப்புமே அவரது உயிர் மூச்சாக இருந்தன.


தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? 1300 சரித்திரத்தில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்டகூட நெருங்க முடியாத எண்ணிக்கை அது. அதனால்தான் அவரை கண்டுபிடிப்புகளின் தந்தை என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.


எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒரு முறை கூறினார் இவ்வாறு:


வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்   


அந்த உயரிய நல்ல நோக்கத்தின் அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அந்த மின் விசையை அழுத்தும்போது உங்களை சுற்றியுள்ள இருளை போக்குவதும் ஒளியை தருவதும் அன்று எடிசன் சிந்திய வியர்வைதான்.
எடிசன் செய்து காட்டியதுபோல 1 விழுக்காடு ஊக்கத்தை முதலீடு செய்து 99 விழுக்காடு வியர்வையை சிந்த நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.


(தகவலில் உதவி - நன்றி திரு. அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

"பயிற்சியும் முயற்சியும் இருந்தால் 
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே"

என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்